உபாகமம். Chapter 25

1 மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.
2 குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.
3 அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்.
4 போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.
5 சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திரசந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
6 மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன் பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும்.
7 அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய்; என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,
9 அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
11 புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக்கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,
12 அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
13 உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.
14 உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம்.
15 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
16 இவைமுதலான அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவன்.
17 எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,
18 நீ இளைத்து விடாய்த்திருக்கையில், பின்வருகிற உன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.
19 உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.