பிரசங்கி. Chapter 11

1 உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
2 ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.
3 மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.
4 காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.
5 ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
6 காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.
7 வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.
8 மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே.
9 வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
10 நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும் வாலிபமும் மாயையே.