நியாயாதிபதிகள். Chapter 17
1 எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
2 அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே; அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
3 அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டுபண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.
4 அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
5 மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
7 யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்
8 அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு, யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில், எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
9 எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப்போகிறேன் என்றான்.
10 அப்பொழுது மீகா: என்னிடத்தில் இரு; நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்றுவஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.
11 அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.
12 மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.
13 அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.