1 இராஜாக்கள். Chapter 6

1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
2 சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது.
3 ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபது முழ நீளமும், ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது.
4 பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.
5 அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுக்களைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.
6 கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காதபடிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.
7 ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
8 நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
9 இவ்விதமாய் அவன் ஆலயத்தைக்கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
10 அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.
11 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று, அவர்:
12 நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்துகொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
13 இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
14 அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
15 ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.
16 தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்ககங்களைத் தொடர்ந்திருக்கிற இருபதுமுழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்.
17 அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.
18 ஆலயத்திற்குள் இருக்கிற கேதுரு மரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.
19 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்.
20 சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.
21 ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன் சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன் தகட்டால் மூடினான்.
22 இப்படி ஆலயம் முழுவதும் கட்டித்தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.
23 சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.
24 கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசி முனை தொடங்கி மற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும் பத்து முழமாயிருந்தது.
25 மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.
26 ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
27 அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரித்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்ததுச் சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாகியிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.
28 அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.
29 ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
30 உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.
31 சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது.
32 ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன்தகட்டால் மூடினான்.
33 இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.
34 அதின் இரண்டு கதவுகளும் தேவதாரிப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.
35 அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.
36 அவன் உட்பிரகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.
37 நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,
38 பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.