சங்கீதம். Chapter 140
1 கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
2 அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
3 சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது.(சேலா.)
4 கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
5 அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா.)
6 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
7 அண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
8 கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)
9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையேமூடுவதாக.
10 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
11 பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
12 சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
13 நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.