சங்கீதம். Chapter 119

1 (ஆலேப்.) கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
3 அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
4 உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
5 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
7 உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
8 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.
9 (பேத்.) வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.
10 என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
11 நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
12 கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
13 உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
14 திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.
15 உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
16 உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.
17 (கிமெல்.) உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
19 பூமியிலே நான் பரதேசி, உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
20 உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.
21 உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
22 நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன்.
23 பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
24 உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.
25 (டாலெத்.) என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
26 என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
27 உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
28 சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
29 பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
30 மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
31 உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
32 நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.
33 (எ.) கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
34 எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன்.
35 உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
36 என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.
37 மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
38 உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
40 இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
41 (வௌ.) கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
42 அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
43 சத்திய வசனம் முற்றிலும் என்வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
44 நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
45 நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
46 நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
47 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.
48 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
49 (சாயீன்.) நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
50 அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.
51 அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
52 கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
53 உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.
54 நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.
55 கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
56 நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது.
57 (கேத்.) கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
58 முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.
59 என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
60 உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
61 துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
62 உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
63 உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.
64 கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
65 (தேத்.) கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
66 உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.
67 நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
68 தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
69 அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
70 அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.
71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
73 (யோட்.) உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று, உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
74 நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
75 கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
76 நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.
77 நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
78 அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
79 உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.
80 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.
81 (கப்.) உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
82 எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.
83 புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
84 உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்புச் செய்வீர்?
85 உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
86 உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.
87 அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
88 உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
89 (லாமேட்.) கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
90 உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
91 உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.
92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
93 நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
94 நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
95 துன்மார்க்கர் என்னை அழிக்க காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
96 சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.
97 (மேம்.) உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.
98 நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
99 உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.
100 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
11 உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
12 நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
13 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
14 உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
15 (நூன்.) உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
16 உம்முடைய நீதி நியாயங்களைக்காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
17 நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
18 கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
19 என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
110 துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன்.
111 உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
112 முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படிசெய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.
113 (சாமெக்.) வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
114 என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
115 பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
116 நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.
117 என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.
118 உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப்போடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.
119 பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
120 உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
121 (ஆயின்.) நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.
122 உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.
123 உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
124 உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
125 நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
126 நீதியைச் செய்யச் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
127 ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
128 எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
129 (பே.) உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
130 உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
131 உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்றுதிறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
132 உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
133 உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.
134 மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
135 உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
136 உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
137 (த்சாடே.) கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
139 என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பத்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.
140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
141 நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
142 உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
143 இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
145 (கோப்.) முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
146 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
147 அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
148 உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்குமுன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.
149 உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
150 தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.
151 கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
152 நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.
153 (ரேஷ்.) என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன்.
154 எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்; உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
155 இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
156 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
157 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
158 உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
159 இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
160 உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
161 (ஷீன்.) பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
162 மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.
163 பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
164 உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.
165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
166 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
167 என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
168 உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
169 (தௌ.) கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
170 என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
171 உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.
172 உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும்.
173 நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
174 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
175 என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.
176 காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக, உமது கற்பனைகளை நான் மறவேன்.