2 இராஜாக்கள். Chapter 15

1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.
2 அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.
3 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
5 கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
6 அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
7 அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
8 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,
9 தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.
10 யாபேசின் குமாரனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
11 சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
12 உன் குமாரர் நாலாம் தலைமுறைமட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று.
13 யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.
14 காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
15 சல்லூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
16 அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.
17 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
18 இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.
19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தைத் தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.
20 இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.
21 மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
22 மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
23 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
24 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.
25 ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
26 பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
27 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
28 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.
29 இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
30 ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
31 பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
32 இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.
33 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.
34 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
35 மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.
36 யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
37 அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.
38 யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.