சகரியா. Chapter 3
1 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலது பக்கத்திலே நின்றான்.
2 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
3 யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
4 அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.
5 அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்; கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.
6 கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:
7 சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.
8 இப்போதும, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.
9 இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
10 அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.